Tuesday, August 25, 2026

பயணம்

வீடு துறந்தவர்க்கு

வானமே கூரை 

மரமே நிழல்

மனதிற்குள்ளே

நெடும்பயணம்

வந்தடைந்தால்

உலகிற்கு வெளிச்சம்

தோற்றாலும் தேடித்தானேத்

தோற்றோம்

என்பதே ஆறுதல்

பின்னே வருபவர்கள்

அடையாமலா போவார்கள்?



காலை

நான் தூங்காமல்

விழித்திருந்தபோது

காலை நீலமாகப்பூத்தது.

சூரியனுக்கு முன்

எழுபவர்கள்

தினமும் அப்படித்தான்

என்கிறார்கள்.

அப்படித்தானா என

மறுபடியும் அப்படி

விழிக்கும்போது

பார்க்கவேண்டும்.

மழை

மழை என்னை

வீடுவரை கொண்டு விட்டுவிட்டு 

நான் மீண்டும் அதை

வெளியே வந்து

பார்த்து விடை

கொடுக்கும் வரை

பெய்து கொண்டேயிருந்தது.

நகரத்தில் பருவம்

பொய்க்காதவரை

வாழ்க்கையில்

நம்பிக்கை பட்டுப்போகாது.


மழையைவிட்டுப்பிரிய

மனமில்லாமல்

இனிப்பற்ற

காஃபியைப்

பருகிக்கொண்டே

சாளரக்கண்ணாடி

வழியே தூறலை

வேடிக்கைப்பார்த்துக்

கொண்டிருந்தேன்

நகரத்தின் வசந்த

காலம் இதுதான் போலும்

கண்ணீரின் நிறமுற்ற

பூக்கள் பொழியும்

தண்ணீர் மாதங்கள்.



கூடு

மதிய வேளையில்

விடாது கூவிய

குயில் சட்டென்று

அமைதியானது

காதல் கைகூடிவிட்டால்

கூக்குரலிடுவதற்கு

என்ன தேவை?

இனி முட்டையிடுவதற்கு

காக்கை கூடு மட்டும்தான்

தேடவேண்டும்

அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்!