Saturday, October 24, 2026

வேரற்றவன்

இதை தபால் பெட்டி

நிறுத்தம் என்று

ஏன் சொல்கிறார்கள்

என்று யாருக்கும்

தெரியவில்லை

கண்ணுக்கு எட்டியவரை

அப்படியொன்று

இருக்கவேயில்லை

காரணப்பெயர்

வேரற்று போய்விட்டது

இது நிறுத்தம்

என்று கூட சொல்வதிற்கில்லை

பக்கத்திலுள்ள

மாந்தோப்பில் விற்கப்படும்

கள்ளச்சாராயத்தை

குடித்துவிட்டு

தள்ளாடிக்கொண்டிருக்கும்

கனவான்களைக்கண்டால் 

பேருந்துகள்

நிறுத்தாமல் ஓட்டமெடுக்கும்

காத்திருக்கும் போதையற்ற 

சகபயணி சொல்லுகிறார்:

நம்மஞ்சல் இன்னும்

உரிய இடத்தில் சேர்க்கப்படவில்லை

கந்தல் ஆடையில்

குப்பை சேகரிக்கும்

பெண் ஒருவர் திடீர்

என்று கேட்கிறார்

உன் ஊர் எது?

நான் வேரற்றவன்

ஒரு படுத்துறங்கும்

ஆண் கடவுளையும் 

தூங்காப்பெண் கடவுளையும்

விட்டுவிட்டுவந்துவிட்டேன் 

இனி திரும்பமாட்டேன்

சிலநேரங்களில்

முகமறியாதவர்களிடம்

நம்குப்பைகளை

கொட்டிவிடுகிறோம்

இந்நாட்டை

சகோதரயுத்தம்

போதிக்கும் கருப்புக்

கடவுள் ஆளுகிறார்

நீ நிறைய வண்டிகளை

தவறவிட்டிருக்கிறாய்

என்று நினைக்கத்

தேவையில்லை

உனதுபேருந்து

இன்னும் வரவில்லை

உன்பயணமும் முடியவில்லை ---

திடீரென்று கத்தினாள்

இதோ வந்துவிட்டது

உன் வாய்ப்பு

நிற்காமல் சென்ற

அரசரை ஓடிப்பிடித்தேன்.






No comments: